சென்னை

ரசு நிலத்தை ஆக்கிரமித்து 3003 கோவில்கள், 131 தேவாலயங்கள் மற்றும் 27 மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1968 ஆம் வருடம் பொது இடத்தில் கட்டப்பட்ட ஒரு விநாயகர் கோவிலை இடிக்க அரசு உத்தரவிட்டது. அதை வெகுநாட்களாகியும் நிறைவேற்றாததால் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 4 ஆம் தேதி நடந்தது.

அப்போது நீதிபதி சுப்ரமணியன் கோவிலில் உள்ள கடவுளுக்கு அரசு நிலத்தை ஆக்கிரமிக்க உரிமை கிடையாது என தெரிவித்தார். அத்துடன் அவ்வாறு ஆக்கிரமிப்பது கடவுளாக இருந்தாலும் குற்றம்தான் என தெரிவித்தார். கடவுள் என்பதால் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை குற்றமில்லை என சொல்ல முடியாது எனவும் சட்டப்படி அதுவும் குற்றம் தான் எனவும் நீதிபதி கூறி இருந்தார்.

அப்போது நீதிமன்றம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்கள் அளிக்குமாறு அரசிடம் கேட்டிருந்தது. இது குறித்து நேற்று முன் தினம் தமிழக அரசு தனது பதிலை சென்னை உச்சநீதிமன்றத்திடம் அளித்தது. அந்த பதிலில் தமிழகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 3003 கோவில்கள், 131 தேவாயங்கள், 27 மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.