வேதாத்திரி நரசிம்ம க்ஷேத்திரம்
ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா செல்லும் வழியில் ஜெக்கய்யபேட்டா என்ற இடத்தில் இருக்கும் நரசிம்ம க்ஷேத்திரமான வேதாத்திரியை நோக்கிச் செல்வோம்.
தல வரலாறு
சோமாக்சுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் வேதங்களைத் திருடிக்கொண்டு கடலுக்குள் மறைந்தான். பிரம்மா நாராயணரிடம் முறையிட அவர் மச்சாவதாரம் எடுத்து வேதங்களை மீட்டார். அந்த வேதங்கள் நாராயணருக்கு நன்றி சொல்லி தங்களுடன் பெருமாளும் தங்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்க இரண்யனை வதம் செய்தபின் அங்கு வருவதாகப் பெருமாள் உறுதியளித்தார்.
எனவே அவரின் வரவை எதிர்பார்த்து கிருஷ்ணவேணி நதிக்கரையில் சாளக்கிராம மலையில் வேதங்கள் தங்கின. இரண்யவதம் முடிந்தபின் பெருமாள் ஜ்வாலா நரசிம்மராக வேதங்களுக்குக் காட்சியளித்தார்.
ஐந்து நரசிம்மர்
வேதங்களை அழைத்துச் செல்ல வந்த பிரம்மா கிருஷ்ணவேணி நதிக்கரையில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராம கல்லுடன் புறப்பட்டார். ஆனால் அந்த கல்லின் உக்கிரத்தைப் பிரம்மாவால் தாங்கமுடியாமல் அதை நதிக்கரையிலேயே விட்டுச் சென்றார். பிற்காலத்தில் ராமரின் சகோதரி சாந்தாவின் கணவரான ரிஷ்யசிங்கர் வேதாத்ரி மலைக்கு வந்தபோது அவரது உக்கிரத்தைத் தணிக்க லட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்தார் பிறகு இவர் லட்சுமி நரசிம்மரானார். இவரைத் தரிசிக்க வைகுண்டத்திலிருந்து கருடாழ்வார் வந்தார்
அவர் தன் பங்கிற்கு ஒரு வீர நரசிம்மரை இங்குப் பிரதிஷ்டை செய்தார். ஜ்வாலா நரசிம்மர் என்பது பெயர் சாளக்கிராம நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் வீர நரசிம்மர் ஆகியோருடன் மூலவராக வீற்றிருக்கும் யோகானந்த நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர்கள் இங்கு வீற்றிருக்கின்றனர். அடிவாரத்தில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்று வடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சனேயருக்குச் சுதைச் சிற்பம் உள்ளது.
உய்யால வழிபாடு
குழந்தை இல்லாதவர்கள் யோகானந்த நரசிம்மருக்கு உய்யால வழிபாடு [உய்யால என்றால் தொட்டில்] குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும் செஞ்சு லட்சுமியையும் தொட்டிலில் இட்டு ஆட்டும் நிகழ்ச்சியை மேற்கொள்ளுகின்றனர்.