டில்லி

ரூ. 1 கோடிக்கு மேல் ரொக்கமாக பணம் எடுப்போருக்கு வரி பிடித்தம் செய்யபட உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் வருடம் அப்போதைய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வங்கி ரொக்க பரிவர்த்தனைகளுக்கு 0.1% வரி விதித்தார். அதன் பிறகு இந்த வரி கடந்த 2009 ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த இந்த வருட நிதி நிலை அறிக்கையில் ரூ. 1 கோடிக்கு மேல் வங்கியில் ரொக்க பண பரிவர்த்தனைகளுக்கு வரிப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது போல் அதிக அளவில் ரொக்க பரிவர்த்தனை அவசியப்படும் நிறுவனங்களுக்கு வரி பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறி உள்ளார். எனவே ரெயில்வே உள்ளிட்ட சில துறைகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கபப்டலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே மாநில மத்திய அரசுகள், வங்கிகள், ஏடிஎம் நடத்தும் நிறுவனங்களுக்கு இந்த விலக்கு அளிக்கபட்டுள்ளது.

இது குறித்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராஜ்கிரண் ராய், “அவ்வளவு பெரிய தொகையை மிக சில நிறுவனங்கள் மட்டுமே ரொக்கமாக வங்கியில் இருந்து எடுப்பார்கள். ஆகவே இந்த நடவடிக்கை வரி வசூலை அதிகப்படுத்த எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக இந்த ரொக்க பரிவர்த்தனைகளை கண்டு பிடிக்க இது ஒரு புது முறை எனவே தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.