சீயமங்கலம் குடைவரைக் கோயில்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் சீயமங்கலம் எனும் ஊர் உள்ளது. வந்தவாசியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பல்லவர் கால குடைவரைக் கோயில் ஒன்றுள்ளது. இக்குடைவரை முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில் குடையப்பட்டதாகும். அதனால் இக்குடவரையின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டாகும்.
குடவரையின் கருவறை மண்டபம் முகப்பில் தெற்குப் பகுதியில் உள்ள தூணில் முதலாம் மகேந்திரவர்மரின் கிரந்தக் கல்வெட்டுள்ளது. அக்கல்வெட்டில் லலிதாங்குரன் எனும் மன்னர் “அவனி பாஜன பல்லவேசுவரம்” எனும் பெயருடைய இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. மேலும் நற்செயல் என்கிற புண்ணிய இரத்தினங்களால் ஆன ஆபரணப் பெட்டி என்றும் இக்கோயிலைப் புகழ்ந்துரைக்கிறது. லலிதாங்குரன் என்பது முதலாம் மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயரில் ஒன்றே.
இக்குடைவரையில் அர்த்தமண்டபம், முன்மண்டபம், திருச்சுற்று மாளிகை, மகாமண்டபம் ஆகியவைகள் காணப்படுகின்றது. இக்கோயிலின் முகமண்டபம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பெரும்பாலை எனும் ஊர் அருகே உள்ள திருப்பாலையூரின் தலைவர் அடைவி என்பவர் பல்லவரசின் சிற்றரசர் கங்கரையர் நேர்குட்டி என்பவரிடம் அனுமதி பெற்று தன் தாயார் நங்கனி நங்கையார் அவர்களின் நினைவாகக் கட்டியதாகக் மூன்றாம் நந்திவர்மரின் மூன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.
இக்கோயிலின் மகாமண்டப தென்மேற்குத் துணை சூடாமணி சோழமாராயன் என்பவரின் மகன் தடாமயன் என்பவரின் மனைவி குந்தக்க மாதேவி என்பவர் செய்தளித்துள்ளார். அதே போல் முதலாம் பராந்தக சோழர் காலத்தில் செறு முக்கரையர் சேதன் கொண்டி அரையர் என்பவரின் மகன் பொரிமையன் என்பவர் திருச்சுற்று மாளிகையில் உள்ள தென்கிழக்குத் தூணை எடுத்துள்ளார். இவரது மனைவி ஜல்லவை என்பவர் திருச்சுற்று முன்மண்டபத்தூணை செய்துள்ளார். இக்கோயிலின் வடக்கு திருச்சுற்று மாளிகை எடுப்பித்தவர் குலோத்துங்கசோழ சம்புவராயர் ஆவார்.
விருப்பண்ண உடையார் என்ற விசயநகர மன்னரின் ஆட்சியில் தான்தோன்றிசுரமுடையான் தன்மதியர் என்ற துறவி இக்கோயிலில் திருச்சுற்றுமாளிகை எடுப்பித்து சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் உருவச்சிலைகளையும் எடுத்துள்ளார். இக்கோயில் திருநிலை வாசல் “மன்னன் கலிங்கத்தரையன் திருவாசல்” என்றுள்ளது. இம்மன்னரின் பெயரில் கோயிலின் நுழைவு வாயில் கட்டப்பட்டு அதற்கு அவரதுப பெயரே வைக்கப்பட்டுள்ளது.
சோழர்கள் காலத்தில் இவ்வூர் பல்குன்றக் கோட்டத்தில் தென்னாற்றூர் நாட்டு சீயமங்கலம் என்றும் இறைவன் “திருக்கற்றளி மகாதேவர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். இராஷ்டிரக்கூட மன்னரான கன்னரதேவரின் மகள் அக்கயதேவி என்பவர் இப்பகுதியின் நிர்வாகத்தினை மேற்கொண்டிருந்ததாக இம்மன்னரின் கல்வெட்டு கூறுகிறது.
பிற்கால சோழர்கள் காலத்தில் சீயமங்கலம் குலோத்துங்கசோழ நல்லூர் என்றும் இறைவன் ” உடையார் தூணாண்டார்” என்றும் இக்கோயில் தூணாண்டார் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சோழர்கள், இராஷ்டிரக்கூடர், பிற்கால பாண்டியர்கள், விசயநகர அரசர்கள் காலத்தில் தானங்கள் நிறைய வழங்கப்பட்டுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
இக்கோயிலின் தனிச்சிறப்பு பல்லவர் காலத்திய நடராஜர் சிற்பமே. தமிழகத்தில் எங்கும் காணாத வடிவத்தில் ஆதி நடராஜராக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.