இட்டகி மகாதேவர் கோயில்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கொப்பள் மாவட்டத்தில் இட்டகி மகாதேவர் கோயில் உள்ளது.
இங்கு பெல்லாரி – கதகு இருப்புப்பாதைச் சாலையில் பானிகோப்பு இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 4.8 கி.மீ. தொலைவில் தெற்காக குக்கனூர் – இட்டகி அமைந்துள்ளது. இட்டகியிலுள்ள மகாதேவர் கோயில் சாளுக்கியப் பேரரசன் ஆறாம் விக்கிரமாதித்தனின் படைத்தலைவர் மகாதேவர் என்பவரால் கி.பி.1112 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கல்யாண சாளுக்கியர் ஆரம்பக்கால கோயில்களில் குக்கனூர் கல்லேஸ்வரம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இக்கோயில் ‘கோயில்களின் பேரரசன்’ என்று கல்வெட்டில் புகழப் பெற்றுள்ளது சாளுக்கியர்களின் கோயிற் கட்டிடத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மகாதேவர் கோயில் விளக்குகிறது.
இட்டகி மாதேவர் ஆலய அமைப்பு
இவ்வாலயமானது கருவறை, அந்தராளம், விமானம், மண்டபம், நந்தி மண்டபம் என்னும் கலை அம்சங்களைக் கொண்டது. இவ் ஆலய புறச்சுவர்களில் உள்ள கோஷ்டங்களில் கடவுள் படிமங்களுக்கு பதிலாகச் சிகரங்களின் குறுவடிவங்களே அமைக்கப்பட்டுள்ளன. இவ் ஆலய விமானத்தளங்கள் உயரம் குறைந்தவை. இதன் மேல் இரட்டை வளைவுடைய ஆமலகம் காணப்படுகின்றது. எனவே திராவிட பாணிக்குரிய கலை அம்சம் மாற்றம் அடைந்து கல்யாணச் சாளுக்கிய கலைப் பாணிக்குரிய விமானம் உருப்பெற்றமைக்கு கல்லேஸ்வரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இக்கோயில் 120 அடி நீளமும் 60 அடி அகலமும் உடையது. கருவறை, இடைக்கழி, நவரங்க மண்டபம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. கருவறையின் மேலமைந்துள்ள விமானம் செவ்வக அமைப்பைக் கொண்டது. சிகரத்தின் மேல் பகுதி காலத்தால் சிதைவடைந்து இடிந்து காணப்படுகின்றது. விமானம் 40 அடி உயரம் உள்ளது.
3 நிலைகளைக் கொண்டுள்ளது. விமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் அழகுடன் அமைக்கப்பட்ட மாடக் குழிகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயிலின் பெரிய மண்டபம் 68 தூண்களை உடையது.
26 தூண்கள் வடிவில் பெரியவை. 26 தூண்கள் மண்டபத்தின் நடுவே அமைக்கப்பட்டு மண்டபக் கூரையினைத் தாங்கியுள்ளன. மற்ற சிறிய தூண்கள் பெரிய தூண்களைச் சுற்றி உள்ளன. இவை சாய்வான கூரையினைத் தாங்குகின்றன. தூண்களில் சிற்பங்கள் மிக நுட்பமான முறையில் நன்றாகச் செதுக்கப்பட்டு அழகுபட அமைந்துள்ளன. இக்கோயிலின் இடிபாடுகளை ஐதராபாத் தொல்லியல் துறையினர் புதுப்பித்துள்ளனர்.