நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் (Namakkal Anjaneyar temple) தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இக் கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். .இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்குக் கோபுரம் கிடையாது. மேலும் இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இக் கோயில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்குக் காட்சியளித்த இடமாக உள்ளது. இங்கு “ஸ்ரீ வைகானச” ஆகம முறை பின்பற்றப்படுகிறது. 1996ஆம் ஆண்டு வாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது.
தல வரலாறு
இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர்.பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினார்.அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்துவந்தார்.அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார்.மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயன்றார்.
ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.”இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்” என்றொரு வானொலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வருகிறார்.ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.
கட்டிடக்கலை
இக் கோயில், தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக் கோயிலில் தட்டையான நுழைவாயில் கோபுரம் உள்ளது. இங்குள்ள 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயரின் சிலை 5ம் நூற்றாண்டில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. கருவறைக்கு மேலே கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் இடுப்பில் வாளுடனும், சாலிகிராமத்தால் ஆன மாலையும் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இத் திருக்கோயில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது.
விழாக்கள் மற்றும் வழிபாடு
நாமக்கல்லில் உள்ள நரசிம்மர் ஆலயம், ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிரில் உள்ளது
இங்குள்ள கோயில் பூசாரிகள் தினசரி ஆஞ்சநேயருக்குப் பூசை செய்கின்றனர். இங்கு ஒரு தினத்தில் நான்கு வேளை பூசை நடக்கிறது. “கால சந்தி” காலை 8மணிக்கும், “உச்சிகால பூசை” பகல் 12 மணிக்கும், “சாய ரக்‌ஷை” மாலை 6 மணிக்கும், “அர்த்தஜாம பூசை” இரவு 8.45 மணிக்கும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பூசை முறையும் மூன்று படிகளைக் கொண்டது.
அவை “அலங்காரம், நைவேத்தியம் மற்றும் தீபாராதனை” போன்றவை ஆகும்.
மேலும், வார, மாத மற்றும் விசேட தின வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இக் கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். விசேட தினங்களில் நேர விலக்கு பின்பற்றப்படுகிறது. பங்குனி-உத்திர திருவிழா தமிழ் மாதமான பங்குனியில் 15 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக இது அமைந்துள்ளது.
ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம், மேலும் துளசி மாலை, சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. தங்க தேர் உலா ஆஞ்சநேயர் கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதும் வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டுப் புறப்படுவது வழக்கம்.