ர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தங்களது சொத்து மதிப்பை குறைத்துக் காண்பித்திருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரிக்கு அறப்போர் இயக்கம் அளித்திருக்கும் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தங்களது சொத்து மதிப்பை குறைத்துக் காண்பித்திருக்கின்றனர்.

இது குறித்து ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகரில் தேர்தல் அறிவிப்பு வெளியான போதே புகார் அளித்திருந்தோம்.

வேட்புமனுவில் வாக்குமூலங்களை பொய்யுரைத்து, மறைத்து அல்லது தவறான தகவல்களை வழங்கியிருந்தால் வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரிப்பது தேர்தல் அதிகாரியின் கடமையாகும். இது தொடர்பாக

தினகரன், மதுசூதனன் மற்றும் மருது கணேஷ் ஆகிய வேட்பாளர்களின் வேட்பு மனுவை ஆராய்வதில் தேர்தல் அதிகாரி தவறிவிட்டார் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

மூன்று பேரும் அவர்களின் சொத்து மதிப்பை குறைத்து மதித்துள்ளார்கள், தினகரன் சொத்துக்களை குறைத்து மதித்தளித்தது மட்டும் இல்லாமல் தனது மொத்த சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை.

டி.டி.வி. தினகரன்

1. சுயேச்சை வேட்பாளரான திரு. டி.டி.வி.தினகரன்,  கீழ்க் குறிப்பிட்டுள்ள சொத்துகளின்  விவரங்களை மறைத்தும், அவற்றை அடிமட்ட நிலையில் மதிப்பீடும் செய்து இருக்கிறார்.

a. அடையார் வெங்கடேஸ்வரநகர் 4வது தெரு கர்பகம் தோட்டத்தில் உள்ள,  அவர், அவர் மனைவி இருவருக்கும் சொந்தமான 8726 சதுர அடி மனையில், 7500 சதுர அடி கட்டிடம் எழுப்பியதாக அதிகார பூர்வமாக த் தெரிவித்துள்ளார். அதன் சந்தை விலை ரூ.1.13 கோடி என்றும் அறிவித்துள்ளார்.

ஆனால் தமிழ் நாடு பதிவுத்துறை யின்  வழிகாட்டுக் குறிப்புகளின் படி, இத்தெருவின் சதுர அடி மதிப்பு ரூ.3350. அதன் படி கணித்தால் மனையின் மதிப்பு ரூ.2.92 கோடி ஆகவும், கட்டிடத்தின் மதிப்பு ரூ.90 லக்ஷமாகவும் (வழிகாட்டு குறிப்புகளின் படி ஒரு சதுர அடிக்கு ரூ. 1200) வருகிறது. ஆக, வழிகாட்டு குறிப்புகளின் படி மனை, கட்டிடம் இவ்விரண்டின் மதிப்பு ரூ.3.82 கோடி என்று வருகிறது. மேலும் அடையார் மனையின் சந்தை விலையை குறைந்த பக்ஷமாகக் கணித்தாலும் அது சதுர அடி க்கு ரூ.15000 என்பதன் அடிப்படையில் மனை (15000 சதுர அடி) மற்றும் கட்டிடம் (1200 சதுர அடி) இவ்விரண்டின் உத்தேச மதிப்பீடு ரூ.13.99 கோடி யாக வருகிறது. திரு.தினகரன் இச்சொத்தை ரூ.12.85 கோடி வித்தியாசத்தில் அடி மட்ட நிலையில் மதிப்பீடு செய்து இருக்கிறார்.

திரு.தினகரன் மேலும் மயிலை வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் உள்ள தன் மனைவிக்குச் சொந்தமான 202 சதுர அடி மனையில் 1000 சதுர அடி கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதன் தற்போதைய சந்தை விலை ரூ.10.88 லக்ஷம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ் நாடு பதிவுத்துறை யின் வழிகாட்டு குறிப்புகளின் படி இச் சாலை யின் சதுர அடி மதிப்பு ரூ.4355. அதன் படி மனை யின் மதிப்பு ரூ.8.79 லக்ஷம் ஆக வருகிறது. கட்டிடத்தின் மதிப்பு,  சதுர அடிக்கு ரூ.1200 என்ற வழிகாட்டு குறிப்புகளின் படி, ரூ.12 லக்ஷமாக வருகிறது. ஆக மொத்தம் மனை, கட்டிடம் இவ்விரண்டின் வழிகாட்டு குறிப்புகளின் படி யான மதிப்பு, ரூ.20.79 லக்ஷம் என்று வருகிறது. மயிலை மனையைச் சதுர அடிக்கு ரூ.15000 எனக் குறைந்த பக்ஷமாகக் கணித்தாலும், மனை (@15000 சதுர அடி) கட்டிடம் (@1200 சதுர அடி) இவற்றின் உத்தேச மதிப்பீடு ரூ.42.30 லக்ஷமாக வருகிறது. திரு.தினகரன் இந்தச் சொத்தையும் ரூ.31.41 லக்ஷம் வித்தியாசத்தில் அடிமட்ட கணிப்புச் செய்து இருக்கிறார்.

தன் வெளிநாட்டுச் சொத்துக்களையும் திரு.தினகரன் மறைத்து உள்ளார்.  சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்க டாலர் 62,61,313 க்கு ஈடான தொகையை Dipper Investments, U.K. என்ற நிறுவனத்திற்கு மாற்றம் செய்தார் என்பதற்காக  FERA மேல் முறையீட்டுக் குழு அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் அக்குழு அம்முழுத்தொகையினையும் இந்தியாவுக்குத் திரும்பச் செலுத்து விடுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் இதுவரை அதை அவர் செய்யவில்லை

பிணக்கில் உள்ள பொறுப்பு உடைமை சம்பந்தமாக சமர்ப்பிக்கப்பட்ட வாக்கு மூலத்தில் (பிரிவு 8 IV) அவர் இதைத் தெரிவித்துள்ளார். ஆனால் இது போன்ற பிணக்கு ஏதும் இல்லை. குற்றம் சார்ந்த வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவ்வழக்கு மேலும் தொடர்வதற்குச் சரியான ஆதாரம் இருப்பதாக் கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற ஆய்வு முடிவுகளுக்கு 2017 ஜூலையில் உடன் பட்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையையும் நிறுத்த மறுத்து விட்டது. குற்றச்சாட்டை  எதிர்த்து வாதிடுவதற்காக திரு. தினகரன் கோரிய கால நீட்டிப்பையும் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 2017இல் தள்ளுபடி செய்தது.  FERA குழுவின் அபராத  ஆணை, அதிகார பூர்வமாக ஏற்கத்தக்க தாகவும் செல்லக்கூடிய தாகவும் தற்போது உள்ளது,அதன் மீது நீதிமன்றத் தடை ஏதும் இல்லாத காரணத்தினால் , தன் சொத்து ரூ. 40.4 கோடி (டாலர் 6261313) என்று அவர் அறிவித்து இருக்க வேண்டும். இத்தொகை சார்ந்த  அறுதியாக்கப்பட வேண்டி இருக்கிற பொறுப்பு (உடைமை)த்தொகை ரூ. 28 கோடி ஆகும்.

முழு சொத்து விவரங்களை  அவர் மறைத்து உள்ளார். மேலும் அச்சொத்து பொறுப்பு உடைமை சம்பந்தமாகப் பிணக்கில் உள்ளது என்ற அவரது வாதம் முற்றிலும் புறம்பானது.

மொத்தத்தில், டிடிவி தினகரன் அவர்கள், ₹53.56 கோடி (12.85 கோடி + 31.41 லட்சம் + 40.4 கோடி) அளவிற்கு தனது சொத்து மதிப்பைக் குறைத்தோ அல்லது மறைத்தோ காண்பித்துள்ளார். அவரது ₹28 கோடிக் கடனை கழித்தாலும் ₹25.56 கோடி அளவில் சொத்து குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.

மதுசூதனன்

2 அதிமுகவைச் சேர்ந்த திரு ஈ மதுசூதனன் அவர்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள சொத்து விவரம் கீழ்க்கண்டவாறு :

◦              அ) திரு மதுசூதனன் அவர்கள், ஆவடியில் திருநின்றவூரில் 3.11 ஏக்கர் அளவான நிலம் தனக்கு சொந்தமானது என அறிவித்துள்ளார் (சர்வே எண் 439/2, 439/3 மற்றும் 439/4). அதனுடைய தற்போதைய சந்தை நிலவரமாக ₹15 லட்சம் மட்டுமே காண்பித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு சார்பதிவாளர் அலுவலகத்தின் வழிகாட்டுதல் நிலவரமானது (guideline value) சர்வே எண் 439/2 ஒரு ஏக்கருக்கு ₹2.51 கோடியும், 439/3 ஒரு ஏக்கருக்கு ₹20.10 லட்சமும், 439/4 ஒரு ஏக்கருக்கு ₹20.10 லட்சமும் ஆகும். எனில், 3.11 ஏக்கரின் மதிப்பு தோராயமாக ₹2.91 கோடி ஆகிறது. குறைந்த பட்ச மதிப்பிட்டாலும் திருநின்றவூரின் சந்தை நிலவரமானது ஒரு சதுரடிக்கு ₹1,500 ஆகும். அவ்விதமே கணக்கிட்டாலும் 3.11 ஏக்கரில் மதிப்பானது ₹20.32 கோடி ஆகிறது. எப்படிப்ப பார்த்தாலும், அவர் தனது சொத்தை ₹20.17 கோடி அளவிற்குக் குறைத்தே காண்பித்துள்ளார்.

◦              ஆ) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் திரு மதுசூதனன் அவரது மனைவிக்கு கவ்வேராசபுரம் (காவேரி ராசிபுரம் என்று வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) என்ற கிராமத்தில் 30 ஏக்கர் நிலம் சொந்தம் என்று அறிவித்துள்ளார். இந்தக் கிராமமானது திருவாலங்காடு துணைப்பதிவாளர் அலுவலகத்தைச் சாரும். அந்தியூர் நிலத்தின் சந்தை நிலவரமாக அவர் ₹80 லட்சம் காண்பித்துள்ளார். ஆனால், சர்வே எண்கள் 460/2, 460/3, 460/4, 461 மற்றும் 463 ஆகியவற்றின் வழிகாட்டுதல் மதிப்பீடு ஏக்கருக்கு ₹9,04,500 ஆகும். எனில், இந்நிலவரப்படி 30 ஏக்கர் நிலத்திற்கு மதிப்பீடு ₹2.71 கோடி ஆகிறது. அப்படிப் பார்த்தால் அவர் அந்தியூர் சொத்தின் மதிப்பை ₹1.91 கோடி அளவிற்குக் குறைத்தே காண்பித்துள்ளார்.

◦              இ) கேகே நகர் பாரதிதாசன் குடியிருப்பில், 840 ச.அ அளவு நிலம் தனக்கும் சொந்தமென திரு மதுசூதனன் அவர்கள் அறிவித்துள்ளார். அதன் சந்தை நிலவரம் ₹20 லட்சம் என காண்பித்துள்ளார். ஆனால் அதன் வழிகாட்டுதல் மதிப்பீடு ஒரு ச.அ ₹4,020 ஆகும் எனில் அந்தியூர் நிலத்தின் மதிப்பீடு மொத்தம் ₹33.8 லட்சம் ஆகும். குறைந்த பட்ச சந்தை நிலவரம் ஒரு ச.அ ₹10,000 என்று கணக்கிட்டுளப் பார்த்தாலும் அதன் மொத்த மதிப்பு ₹84 லட்சம் ஆகிறது. எனில் அவர் அந்தச் சொத்தின் மதிப்பை ₹64 லட்சம் அளவில் குறைத்தே காண்பித்துள்ளார்.

மொத்தத்தில் திரு மதுசூதனன்அவர்கள் ₹22.72 கோடி அளவில் தனது சொத்து மதிப்பைக் குறைத்தே அறிவித்துள்ளார்.

மருது கணேஷ்

3. திமுகவைச் சேர்ந்த திரு மருது கணேஷ் அவர்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள சொத்து விவரம் கீழ்க்கண்டவாறு :

அ) சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 960 ச.அ அளவு நிலமும் அதில் 1920 ச.அ கட்டப்பரப்பும் தனக்குச் சொந்தமென திரு மருது கணேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். அதன் தற்போதைய சந்தை நிலவரமாக ₹10 லட்சம் காண்பித்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பீட்டைக் குறிப்பிடாதது மட்டுமல்லாமல் அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒன்று அவர் தனது சொத்தைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது வேண்டும் இல்லையேல், ஒருவேளை அவர் அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர் இல்லையெனில், ஒரு கோயிலுக்குச் சொந்தமான இடத்தின் கட்டடத்திற்கு மட்டும் எவ்வாறு சொந்தம் கொண்டாட இயலும்!! தமிழ்நாடு சார் பதிவாளர் அலுவலகத்தின் வழிகாட்டுதல் மதிப்பீட்டின் படி அந்தத் தெருவில் ஒரு ச.அ ₹2,345 எனில் அந்நிலத்தின் மதிப்பு ₹22.51 லட்சமும், 1920 ச.அ கட்டடத்தின் மதிப்பு ₹23.04 லட்சமும் ஆகிறது. ஆக நிலமும் கட்டடமும் சேர்த்து மதிப்பிட்டால் ₹45.55 லட்சம் ஆகிறது. குறைந்த பட்ச சந்தை நிலவரம் ஒரு ச.அ ₹5,000 எனக் கொண்டாலும் மொத்த மதிப்பு ₹71.04 லட்சம் ஆகிறது. எப்படிப் பார்த்தாலும் அவர் ₹61 லட்சம் அளவிற்குத் தனது சொத்தைக் குறைத்தே காண்பித்துள்ளார்.

 

மொத்தத்தில் திரு மருது கணேஷ் அவர்கள் தனது சொத்து மதிப்பை ₹61 லட்சம் அளவில் குறைத்தே காண்பித்துள்ளார்.

மேற்கூறப்பட்டவையின் அடிப்படையில் இவர்கள் அனைவருடைய மனுக்களையும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இவர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பைக் குறைத்தே காண்பித்துள்ளனர். மேலும், இவற்றிற்குப் போதுமான ஆதாரம் இருப்பதால் இவற்றின் அடிப்படையில் இவர்கள் பேரில் முதல் தகவல் அறிக்கை FIR தாக்கல் செய்து இனிவரும் எந்தத் தேர்தலிலும் இவர்கள் போட்டியிடும் அனுமதியை இரத்து செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஐயா, மேற்க்கூறப்பட்டவையிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் மனுதாக்கல் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நாணயத்தை இவர்கள் யாவரும் பின்பற்றவில்லை. இவர்கள் தாக்கல் செய்யும் இந்த மனுக்களே இவர்களை மக்கள் அறியச்செய்யும் வாக்குமூலமாகும். இந்தப் பொய் மனுத்தாக்குதலுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்காவிடில் ஜனநாயகத்திற்கே இழிவாகும். மக்களின் பிரதிநிதி சட்டம் பிரிவு 125 ஏ கூறுவதாவது இந்தத் தவற்றிற்கு 6 மாதம் வரைச் சிறைத் தண்டனை அளிக்கக் கூடும். எனவே பொய்யான இம்மனுக்களை அதிகாரி அவர்கள் நிராகரிக்க வேண்டும். இவ்வாறாக இவர்கள் பொய் மனுத்தாக்கல் செய்வது இது இரண்டாவது முறை ஆகும். மேலும் மீதமுள்ள அனைத்து மனுக்களையும் மீண்டும் முழு பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையரையும் அதிகாரியையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அறப்போர் இயக்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது”- இவ்வாறு அறப்போர் இயக்கம் அளித்திருக்கும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.