ரவுண்ட்ஸ்பாய் டைரியில் இருந்து… (முதன் முறையாக முடிந்தவரை தூய தமிழில் எழுதியிருக்கிறார் ரவுண்ட்ஸ்பாய்!)

ர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.

அதில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு சேகர்ரெட்டி வழங்கிய லஞ்சப்பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் பட்டியலில், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், “சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டு. மேலும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சேகர் ரெட்டி, “எனக்கு டைரி எழுதும் வழக்கமே கிடையாது. தவிர துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தினை இரு முறைதான் சந்தித்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, “சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் சில பக்கங்கள்” என்ற குறிப்புடன் சமூகவலைதளங்களில் ஒரு பட்டியல் வெளியானது.

அதில்  பிரபல ஊடகவியலாளர்கலான, தந்தி தொலைக்காட்சி பாண்டே மற்றும் ஹரிஹரன் உட்பட சிலரது  பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

ரங்கராஜ் பாண்டே

இந்த நிலையில் இது குறித்து தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டேவின் கருத்தை அறிய தொடர்புகொண்டோம்.

“உங்கள் பெயருடன் கூடிய அந்த போலி பட்டியலைப் பார்த்தவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?” என்றோம்.

அதற்கு ரங்கராஜ் பாண்டே, “ எனக்கு ஒண்ணுமே இல்லை.. கமெண்ட்டே இல்லை. அமைதியா பார்த்துக்கிட்டிருக்கேன். நிறைய விசயங்களை கடந்து போறேன்.. அப்படித்தான் இதையும் கடந்து போறேன்” என்றார்.

மேலும் நாம் பேச முயன்றபோது, “நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் நான் பேட்டி கொடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

அடையாளமற்றவர்களால் சமூகவலைதளங்களில் பரப்பிவிடப்படும் பட்டியல் குறித்து இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதாவது:

“சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை அடுத்து, அதை திசைத்திருப்ப ஊடகவியலாளர்கள் சிலரது பெயருடன் பட்டியல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அடையாளத்தை மறைத்துக்கொண்டிருக்கும் சிலர் போலியான இப்பட்டியலை சமூகவலைதளங்களில் பரப்புகிறார்கள். இதையும் நம்பும் அப்பாவிகள் இந்தப் பட்டியலை பகிர்ந்துவருகிறார்கள்.

சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை திசைத்திருப்பும் முயற்சியே இது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.