பெண்கள் பார்க்காத அம்பாள்

அருள்மிகு அருங்கரை அம்மன் கோயில், பெரிய திருமங்கலம், கரூர்

இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோயில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும். ஆண்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று வழிபடுகின்றனர்.

பெண்களுக்கு உள்ளே அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, தலை முடியாமல், ஈரத்துணியுடன் வழிபட வேண்டும்.

அம்பாளுக்குப் பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றைக் கோயில் முன் மண்டபத்தில் இருந்து “சூரை’ (எறிதல்) விடுகின்றனர். இதனைப் பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.

சிறப்பம்சங்கள் :

அம்பாள் கோயில்களில் வழக்கமாகத் தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்குத் தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள்.

கோயில் அருகே ஓடும் அமராவதி ஆறு அம்பாளுக்கு மாலையிட்டது போல இவ்விடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் அம்பாள் “நல்லதாய்’ என அழைக்கப்பட்டாள். ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால் இவளை “அருங்கரை அம்மன்’ என்றும் அழைத்தனர். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.