அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில்

இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.
இயற்கை அமைப்பு
காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி – குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான் கோட்டை ஆஞ்சநேயர் ஆலயமும், கோட்டை காளி ஆலயமும் பழமையான பிற முக்கியமான கோவில்களாகும். இவ்வூரின் பெரும்பான்மையானோர் விவசாயம் செய்து வாழ்கின்றனர்.
தல வரலாறு
அக்கினி வழிபட்ட தலமாதலால் இக்கோயிலுக்கு ‘அக்னீஸ்வரம்’ என்று பெயர். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனது பூசைக்காகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூட்டி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண், மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப் பட்டுவருகிறது.
கோயில் சிறப்பு
இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாட்களில் நீராடி வழிபடுவது சிறப்பென்பர். இக்கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.
மூலவர் – சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். படிகள் இறங்கிச் சுற்றி வலம் வரலாம்.
முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில் பள்ளி என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருந்ததற்கான சான்று என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது.
மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது.
(காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.)
Patrikai.com official YouTube Channel