சென்னை

நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசுக் காருக்கான நுழைவு வரியை செலுத்தி உள்ளார்.

தளபதி எனச் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார்.  அந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

நீதிபதி தனது தீர்ப்பில், “அபராத தொகையை 2 வாரங்களில் தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்க வேண்டும்.  வரி என்பது கட்டாய பங்களிப்பே தவிர நன்கொடை அல்ல.  ஒரு நடிகர் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இது விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே விஜய் இந்த விமர்சனத்தை எதிர்த்தும் அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.   அப்போது விஜய் செலுத்த வேண்டிய அபராதத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதியின் கருத்துக்கள் குறித்து  நான்கு வாரங்கள் கழித்து விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் விஜய்யின் காருக்கான நுழைவு வரியை வணிக வரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டு அறிவிக்க வேண்டும் எனவும் அதை விஜய் ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டது.   இதையொட்டி நடிகர் விஜய் ரூ.40 லட்சம் வரி செலுத்தி உள்ளார்.  ஏற்கனவே ரூ.8 லட்சம் செலுத்தி இருந்த விஜய் தற்போது மீதமுள்ள ரூ.32 லட்சத்தையும் செலுத்தியுள்ளார்.