டில்லி

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர்களிடம் அவர்கள் சாதி மற்றும் மதம் குறித்து விவரம் சேகரிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த வாரம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் அனைத்து துறை மூத்த மருத்துவர்களிடமும் ஒரு பக்கம் கொண்ட படிவம் ஒன்று தரப்பட்டு அதை நிரப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த படிவத்தில் பெயர், வயது, பணி நியமனம் மற்றும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்பட்டிருந்தது.

இது குறித்து டில்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலெரியா, “எனக்கு அப்படி ஒரு படிவம் அளிக்கப்பட்டது தெரியாது. எந்த ஒரு மூத்த மருத்துவரிடமும் அவர்களுடைய சாதி மற்றும் மதம் பற்றி கெட்கவில்லை. நான் அது போல படிவத்தை பார்த்தது கூட கிடையாது. எய்ம்ஸை பொருத்தவரை நாங்கள் மருத்துவர்களின் சாதி மற்றும் மதத்தை குறித்து எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. அவ்வாறு கேபது தவறானது” என தெரிவித்துள்ளார்.

அதே மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர், “இது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. மருத்துவ மனையில் பணி புரியும் மருத்துவர்களின் சாதி மற்றும் மதம் குறித்து அவர்க்ள் ஏன் பேச வேண்டும்? மாணவர்களுக்கான நுழைவு தேர்வில் கூட அத்தகைய கேள்விகள் கேட்பதை மாணவர்கள் விரும்புவதில்லை.” என தெரிவித்துள்ளார்

எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் மிஸ்ரா, “நான் இதுவரை மருத்துவர்களிடம் இத்தகைய விவரங்களை கேட்டதாக கேள்விப்பட்டதே இல்லை. எய்ம்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தில் இது போன்ற பிரிவினை பேச்சுக்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.