காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
திருத்தலப் பெருமை
இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனைப் பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அப்பொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.
மாமரம்
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
இது முத்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாக, திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறு கோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சி மயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
கோயில் வரலாறு
ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று
கருதப்படுகின்றது.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்
இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம்மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.
இக்கோயிலின் வெளி மதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.