ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அயோத்தி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான பவன் பாண்டே செய்தியாளர்களிடம் நேற்று இதனை தெரிவித்தார்.

2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் ராமஜென்மபூமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்கான 15 பேர் கொண்ட கமிட்டியை 2020 ம் ஆண்டு பிப்ரவரி-யில் நியமித்தது மத்திய அரசு. பின்னர் 2020 ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தினார் பிரதமர் மோடி .


கோயிலின் அபிவிருத்திக்காக 1.3 லட்சம் சதுர அடி கொண்ட சுமார் 3 ஏக்கர் நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு மார்ச் மாதம் 18 ம் தேதி கூடுதலாக வாங்கியுள்ளது ராமர் கோயில் அறக்கட்டளை,

இந்த நிலம் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக பவன் பாண்டே கூறியுள்ளார், இவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. சஞ்சய் சிங்-கும் இதே குற்றச்சாட்டை கூறியதோடு இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

இவர்கள் வெளியிட்டிருக்கும் ஆவணத்தில், புதிதாக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் இடத்தை குசும் பதக் என்பவரிடம் இருந்து 2 கோடி ரூபாய்க்கு மார்ச் மாதம் 18 ம் தேதி இரவு 7:10 க்கு வாங்கி 5 நிமிட இடைவெளியில் 7:15 க்கு அதே நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு சுல்தான் அன்சாரி என்பவர் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார். பதிவுத்துறை தரவுகளின் படி இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 5.7 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இ-பதிவு முறையில் நடந்திருக்கும் இந்த இரண்டு பத்திரப் பதிவுக்கான முத்திரைத்தாள் 5:11க்கும் 5:22க்கும் வாங்கப்பட்டுள்ளது.

5:22க்கு வாங்கப்பட்ட முத்திரை தாளில் இந்த நிலத்தை குசும் பதக் 2 கோடி ரூபாய்க்கு சுல்தான் அன்சாரிக்கு விற்பனை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது, இதற்கு சுமார் பத்து நிமிடம் முன்னர் 5:11க்கு வாங்கப்பட்ட முத்திரை தாளில் சுல்தான் அன்சாரி இந்த நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தி நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா ஆகிய இருவரும் சாட்சிகளாக இவ்விரு ஆவணங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இந்த நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்ற சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி என்பவருடன் இணைந்து கூட்டாக அயோத்தியில் நிலம் வாங்கி விற்கும் இடைத்தரகர்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர், அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா, ரவி மோகன் திவாரியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலத்தை ஐந்து நிமிடத்தில் 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கியதன் மூலம் அறக்கட்டளைக்கு 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் சம்பட் ராய்-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“மகாத்மா காந்தியை கொன்றது நாங்கள் தான் என்று குற்றம் சாட்டிய நாடு இது” என்று கூறிய ராய் “இந்த விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை, இது தொடர்பான ஆவணங்களை பார்த்து விட்டு கூறுவதாக” கூறினார்.

சாட்சியாக கையெழுத்திட்ட அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ராவிடம் “இரு ஆவணங்களிலும் சாட்சி கையெழுத்திட்டுருக்கும் உங்களுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வது தெரிந்திருந்தும், சாமானிய மக்களிடம் இருந்து நண்கொடையாக வசூலித்த பணம் விரயமாவதை ஏன் தடுக்கவில்லை” என்று செய்தியாளர்கள் கேட்டனர், இதற்கு பதிலளிக்காமல் காரில் ஏறி சென்றுவிட்டார்.

120 கோடி இந்திய மக்களின் மத நம்பிக்கையையும் பக்தர்களின் நன்கொடையையும் ராமர் கோயில் அறக்கட்டளை என்ற பெயரில் ஏமாற்றி சுருட்டி வரும் விவகாரம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.