டெல்லி: தமிழ்நாட்டில் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து நாசமாகி வரும் நிலையில், உச்சநீதிமன்றம் இன்று நல்ல உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கை வரும் 21ந்தேதிக்கு ஒத்தி வைத்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. காவிரி ஆணையம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்து வருகிறது. அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் காவிரி விவகாரத்தில் எடக்கு மடக்காக பேசி வருகிறார். இதுதொர்பாக தமிழ்நாடு அரசு கர்நாடக மாநில அரசை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தாமல் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.

இதற்கிடையில், காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் காய்ந்து நாசமாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், அது போதாது, 24,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. மேலும், ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டியிருந்தது.

இந்த வழக்கை  ஆகஸ்டு மாதம்  25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி நீா் திறந்துவிடப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பா் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநில அரசு,  இந்த வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதி விசாரித்தால் போதுமானது என்று கர்நாடக அரசு கூறியது.  இதற்கிடையில் காவிரி  வழக்கை விரைந்து செப்டம்பர் 4 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிக்கை விடுத்தது. இதைத்தொடர்து இரு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்காமல்,  செப்டம்பர் 6 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இன்றைய  விசாரணை பட்டியலில் காவிரி வழக்கு இடம்பெறவில்லை. இதனால், தமிழகஅரசு அதிர்ச்சி அடைந்தது. இதுதொடர்பாக  தமிழக அரசு தரப்பில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதியிடம் முறையிடப்பட்டது.  ஆனால், நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 21ஆம் தேதி காவிரி வழக்கை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளதாகவும், அடுத்த வாரம் நீதிபதி கவாய் விடுப்பில் செல்லவுள்ளதாகவும், அதன்பிறகே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை காரணமாக, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய காவிரி நீர் வருவது மேலும் தாமதமாகி உள்ளது. இதனால், சம்பா பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். பயிர்கள் காய்ந்து நாசமாகி வருகிறது. வழக்கை மேலும் 15 நாட்கள் ஒத்திவைப்பதன்மூலம்   தமிழ்நாடு விவசாயிகளின் வயிற்றில்  அடித்துள்ளது உச்சநீதிமன்றம் என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.