ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி செய்தும், அதன் பலன் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி சச்சின் பைலட் கருத்து கூறி உள்ளார்.

ராஜஸ்தானில், காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை  முதலமைச்சராக இருந்த  சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் எழுந்தது. அதன் விளைவாக பைலட்டின் துணை முதலமைச்சர் பதவியும், மாநில கட்சி தலைவர் பதவியும் பறிக்கப்பட்டன.

இந்த பெரும் பரபரப்புகளுக்கு இடையே ராஜஸ்தானில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே  அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கு கோரினார். குரல் வாக்கெடுப்பில் அரசு வென்றதாக சபாநாயகர் அறிவித்தார். அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து சச்சின் பைலட் கருத்து கூறி இருப்பதாவது: அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு இன்ற ராஜஸ்தான் சட்டமன்றத்தில் மிகச் சிறந்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பல்வேறு முயற்சிகள் இருந்தபோதிலும், இதன் விளைவாக அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளது என்று கூறி உள்ளார்.