சென்னை
காலை முதல் போக்குவரத்துக் கழக வேலை நிறுத்தம் தொடங்கிய போதும் சென்னையில் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயங்கி வருகின்றன.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. நேற்று இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி போராட்டம் தொடங்கும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இன்று, முதல் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்கும் போது தடுத்து நிறுத்துவது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயல்வது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என தொ மு ச மற்றும் ஐ என் டி யு சி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்குத் தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இன்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய போதிலும் இது முழுமையாக நடைபெறவில்லை எனத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று வழக்கம் போலப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.