சென்னை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்க உள்ளது.

கடந்த 6 ஆம் தேதி இரவு முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை உள்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பிறகு 8ம் தேதி அவ்வப்போது லேசான மழை பெய்தது. கன மழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிந்து எங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. வெள்ள நீரில் சிக்கியவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மழை பெய்யாமல் இடை வெளி விட்டதால், மீட்புப் பணிகள், நீரை வெளியேற்றும் பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை காலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை மாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது.  ஏற்கனவே கடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.  தற்போது வடக்கு திசையில் நகர்வதால் மாமல்லபுரத்தைக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்க வாய்ப்பு உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் – ஸ்ரீ ஹரிகோட்டா இடையே நாளை மாலை அல்லது இரவு கரையைக் கடக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் நாளை காலை 8.30 மணிக்குள் மிகப் பலத்த மழை பெய்யும். இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் மிகப் பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்குவது, போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.