சென்னை: பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் பொதுநிலை பட்ஜெட்டும், 14ந்தேதி வேளாண் பட்ஜெட்டும், காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. அதையடுத்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடை உள்ளது. இதையடுத்து, பேரவை நடவடிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று காலை, மாலை என இருமுறை சட்டப்பேரவை கூடுகிறது.
இன்று காலை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கியது. அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் தனது தரப்பு விளக்கத்தை எடுத்துரைக்க முயன்றதார். ஆனால், அவருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த ஆட்சியின் திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் முடக்கப்பட்டு வருகின்றன என்று கூறி, பேச வாய்ப்பு வழங்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு, அதிமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக புறக்கணிப்பதாக குற்றசாட்டினார். கடந்த ஆட்சியின் திட்டங்களை குறித்து பேரவையில் பேச வாய்ப்பு கேட்டோம். பேரவையில் பேச வாய்ப்பளித்து பாதியில் நிறுத்தி விட்டதாகவும், இந்த நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது தவறு என குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த வேளாண் விற்பனைக்குழு திரும்பப் பெறப்படும் என்று திமுக சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டுவர அனைத்தும் திட்டமிட்டு பணிகள் தொடங்கிய நிலையில் திமுக அரசு அதனை புறக்கணித்து வருகிறது. சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு தினமும் மரியாதை செலுத்தி வந்தோம். ஆனால், அங்கிருந்த ஏணியை அகற்றிவிட்டார்கள். அதுபோல, ‘தாலிக்குத் தங்கம்’ திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஏழை, எளிய பெண்களுக்கு கிடைக்காமல் வழிவகை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு பேரவையில் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், எங்களுடைய பேச்சையும் அவைகுறிப்பில் இருந்து எடுத்துவிட்டார்கள். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு புறக்கணித்து வருகிறது அதிமுக அரசின் திட்டங்கள் முடக்கப்படுகின்றன என்று கூறினார்.