டில்லி:

மெரிக்காவில் நடைபெற உள்ள சிகாகோ உலக தமிழ்மாநாடுக்கு தமிழகஅரசு நிதி வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும், தமிழ் மாநாட்டுக்கு செல்பவர் களுக்கு விசா வழங்கப்படுவதிலும் இழுபறி நீடித்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 3ந்தேதி முதல் முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச தமிழாய்வு சங்கத்தினர் இம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள ஏராளமான அமைப்புகள் நிதிஉதவி வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த 9  உலகத் தமிழ் மாநாட்டுக்கும் தமிழக அரசு நிதி உதவி வழங்கி நிலையில், 10-வது மாநாட்டுக்கும் ரூ.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தது.

இந்த மாநாடு வெளிநாட்டில் நடைபெறுவதால், தமிழக அரசின் நிதி அனுப்புவதற்காக மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். அதன் காரணமாக தமிழகஅரசு முறைப்படி மத்திய அரசுக்கு பலமுறை அனுமதி வழங்கும்படி கேட்டும், மோடி அரசு இதுவரை அனுமதி வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.

இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உலக தமிழ்மாநாட்டு நிர்வாகிகள் தமிழக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூலம் மத்தியஅரசுக்கு நெருக்குதல் கொடுக்க முன்வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, தமிழக எம்.பி.க்களான வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர், எஸ்.செந்தில் குமார், கே.நவாஸ்கனி மற்றும் ஏ.செல்லக்குமார் ஆகியோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், உலக தமிழ் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க, அமெரிக்க விசா  அனுமதி கோரி 7 பேர் தாக்கல் செய்துள்ளதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பி விசாவுக்கு மனு செய்திருந்த சுமார் 40 பேர்களுக்கும் இன்னும் விசா வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் அறிவுறுத்திலின் பேரிலேயே அமெரிக்க அரசு விசா வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டுப்படுகிறது. ஏற்கனவே மோடி அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகமே போர்க்களம் பூண்ட நிலையில், தற்போது அமெரிக்காவில் நடைபெற உள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் தமிழர்களையும், தமிழக அரசின் நிதியையும் திட்டமிட்டு தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்களிடையே மோடி அரசு மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.