சென்னை:  தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்தினசரி  1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பினால் பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து,  சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், பொது சுகாதார விதிகளின்படி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நபர்களுக்கு டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  மேலும், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடை, நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு ரூ. 5,00 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும்  தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து  நாளை (அக்டோபர் 1ந்தேதி)  மாநிலம் முழுவதும் 100 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,  நாள்தோறும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட வேண்டும், மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு  பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,”தமிழ்நாட்டில் மழை காரணமாக சில மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் 1000 இடங்களில் நாள்தோறும் இலவச காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் பகுதிகளில் காலை 9மணியில் இருந்து 4மணி வரை முகாம்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் இடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக உரிய சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை சுகாதாரத்துறை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.