சென்னை,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கழிவு பொருட்கள், டயர்கள் போன்ற பழைய பொருட்களை தேக்கி வைத்திருந்த 20000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது.
தினசரி ஆயிரக்கணக்கானேர் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையை நாடி வருகின்ற னர். இதனால் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் சுகாதார அதிகாரிகள் மற்றும் நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி அதிகாரிகளும் டெங்கு ஒழிப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்ற தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வு காரணமாக, பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் அமைந்துள்ள பழைய பேப்பர் இரும்பு கடைக்காரர்கள், டயர் கடைகள், கழிவு பொருட்களை சேகரிக்கும் கடைக்காரர்களுக்கு தொற்றுநோய் தடுப்பு இயக்ககம் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
அத்துடன் கொசு உற்பத்திக்கு அச்சாரமாக திகழும் கழிவுபொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்றும், இரண்ட நாட்களில் அகற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவித்து உள்ளது.