சென்னை,

மிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி 10க்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவி வருகின்றனர். மேலும்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்குவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு குறித்து அறிந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பி உள்ளது.

அந்த குழுவில்,

1)அசுதோஷ் பிஷ்வாஸ் -எய்ம்ஸ் மருத்துவர்

2)சுவாதி துப்லிஸ்- குழந்தைகள் நல மருத்துவர்

3)கவுஷல் குமார் , பூச்சியினால் பரவும் நோய் கட்டுபாட்டு மையம்

4) கல்பனா பர்வா பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம் இணை இயக்குனர்

5) வினய் கர்க்- பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம் துணை இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அரசு செயலாளர்களுடன் ஆலோசனை செய்து, பின்னர்  மருத்துவமனை சென்று எத்தனை நாட்கள் ஆய்வு செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பின்னர், ஆய்வு குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என்றும் கூறி உள்ளனர்.