தீபாவளி: மதுரையில் 156 கைதிகளுக்கு பரோல்!

மதுரை,

தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 156 கைதிகளுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்நிலையில, வருகிற 18ந்தேதி தீபாவளியை பண்டிகையின்போது குடும்பத்தினருடன் கொண்டாடி கைதிகள் பலர் பரோல் கேட்டு மதுரை சிறைத்துறை சூப்பிரண்டிடம் மனு கொடுத்திருந்தனர்.

கைதிகள்  மனு குறித்து விசாரித்த சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளின் நன்னடத்தைகளை பரிசீலனை செய்து பரோல் வழங்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 156 கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்படி வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந் தேதி (வியாழக்கிழமை) வரை அவர்களுக்கு 5 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்து மறுநாள் (19-ந் தேதி) மாலையில் மீண்டும் கைதிகள் சிறைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Diwali festival: Parole for 156 prisoners in Madurai