மதுரை:

துரை  திருமங்கலம் அருகே பேரையூரில் அமைக்கப்பட்டிருந்த  சர்ச்சைக்குரிய தீண்டாமை தடுப்புச்சுவர் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

சந்தையூரில் உள்ள தீண்டாமை சுவரை இடிக்க வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று  கோட்டாட்சியர் சுகன்யா தலைமையில் சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக சந்தையூர் அருந்ததியின மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சந்தையூர் இந்திரா நகரில் கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரை அகற்ற வேண்டுமென்றும் அந்தப் பகுதியை சேர்ந்த அருந்ததியின  மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

அது தீண்டாமைச் சுவரல்ல, எங்கள் கோயிலின் சுற்றுச்சுவர்’ என்று அந்த பகுதியை சேர்நத் மற்றொரு பிரிவினர் கூறி வந்தனர். இது பிரச்சினையாக உருவெடுத்தது. இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், இரு தரப்பினரும் ஒத்து வராத நிலையில், ஒரு தரப்பினர்,  அப்பகுதி யிலிருந்து வெளியேறி அருகிலுள்ள மலையில் குடியேறி போராட்டம் நடத்தி வந்தார்கள்.

இதையடுத்து, மதுரை கலெக்டர் வீரராகவராவ், இரு தரப்பினரிடமும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்,  முடிவு எட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய சுவரில், 6 அடி  நீளம் அளவுக்கு சுவரை உடைத்து அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள கோவிலில்  இரு தரப்பும் வழிபாடு செய்துகொள்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, மலைமீது குடியேறியவர்கள்,  போராட்டத்தை முடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி வருவதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சந்தையூர் போராட்டம் முடிவுக்கு வருவதாக அறிவித்த மாவட்ட நிர்வாகம்,  சர்ச்சைக்குரிய சுவரை  இடிக்கும் பணியை இன்று காலை தொடங்கி உள்ளது.

கோட்டாட்சியர் சுகன்யா தலைமையில் சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.