சென்னை:

திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் அண்ண அறிவாலயத்தில் தொடங்கியது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,  வரும் 16ந்தேதி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித்தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் கணேசமூர்த்தி, திராவிடர் கழகத்தலைவர் கீ. வீரமணி, மமக ஜவாஹிருல்லா, வி சி க திருமாவளவன், காங்கிரஸ் திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்றனர்.

காவிரி விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம்  சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  முழு அடைப்பு 100% வெற்றி பெற உதவிய அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

நேற்றைய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய வணிகர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், கட்சி தலைவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் கூடுதல் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி மீட்பு பயணம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, டெல்டா பகுதியில் காவிரி உரிமை மீட்பு பயணம், இரண்டு பிரிவுகளாக நடைபெற இருக்கிறது.

வரும் 7ம் தேதி(நாளை) திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து ஒரு பயணம் தொடங்குகிறது. பிறகு வரும் 9ம் தேதி அரியலூர் மாவட்டத்திலிருந்து மற்றொரு பயணம் தொடங்குகிறது.

இந்த இரண்டு பயணத்தையும் திராவிடர் கழக தலைவர் வீரமணி தொடங்கி வைப்பார்.

இந்த பயணங்களில் அனைத்து கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் கலந்துகொள்வர்.

மேலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 16ம் தேதி அனைத்து கட்சிகளின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்போது, நேற்றைய சாலை மறியல் போராட்டம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஸ்டாலின்,  காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.