டில்லி:

வரலாற்று கட்டடங்களை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறுபவர்கள் ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினார், லால் குயிலா ஆகியவற்றையும் இடிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்எல்ஏ.வுமான அசாம் கான் தெரிவித்தார்.

தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது. அதனால் அதை இடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சங்கீத் சாம் நேற்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து சங்கீத் சாமின் சொந்த கருத்து என்று பாஜக தலைமை தெரிவித்தது. எனினும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசாம் கான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஏன் தாஜ்மகால் மட்டும்? ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினார், லால் குயிலா ஆகியவையும் அடிமைத்தனத்தின் சின்னம் தான். இதையும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துரோகிகளின் அடையாளம் என்று கூறலாம். இது உண்மை என்றால் தாஜ்மகாலை தாராளமாக இடிக்கலாம்’’ என்றார்.

அசாம் கான் இது போல் நினைவு சின்னங்களை அடிமைத்தனத்தில் அடையாளம் என்றும், அதை இடிக்க வேண்டும் என்று சர்ச்சையாக பேசுவது வாடிக்கையான விஷயம். உ.பி.யில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாஜக அரசு வெளியிட்ட ஒரு புத்தகத்தில் தாஜ்மகாலை கட்டியவர் முகலாய பேரரசர் சாஜகான் என்ற வாசகம் மாயமாகியிருந்தது.

ஆனால் தாஜ்மகால் அன்பின் நினைவுச் சின்னமாக மாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சுற்றுலா துறை அமைச்சர் ரீதா பகுகுனா ஜோஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.