மதுரை:

ழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலையை  மறித்து அவர்களை முற்றுகையிடுவோம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

வக்கீல் சங்க தலைவர் பேட்டி
வழக்கறிஞர் சங்க தலைவர் பேட்டி

வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை  வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு முழு வதும்  நீதிமன்ற புறக்கணிப்பு ,  ஐகோர்ட்டு முற்றுகை போன்ற பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   கடந்த இரண்டு மாதங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

 இந்த போராட்டத்தை ஒடுக்க டெல்லி பார்கவுன்சில் அதிரடி நடவடிகை எடுத்து  126 பேரை சஸ்பெண்ட் செய்தது.  இருந்தாலும் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று  வருகிறது.

வழக்கறிஞர்கள் தொடர்  போராட்டம் காரணமாக நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அனைத்து நீதிபதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம்
ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் (பைல் படம்)

அதில் மேற்கொண்ட  தீர்மானம்படி,   மனுதாரர்களே நீதிமன்றத்தில் ஆஜராகலாம்  எனவும்,  மனுதாரர்களை  தடுக்கும் வக்கீல்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட்,  தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

இதற்கிடையில், மதுரையில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன்  கூறியதாவது:

  • வக்கீல்கள் சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்.
  • கீழமை நீதிமன்றங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் வக்கீல்களை அச்சுறுத்த நினைக்கின்றனர்.
  • தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் நடக்கும் போராட்டம், அடுத்த கட்டமாக டெல்லி மற்றும் நாடு முழுவதும் பரவும்.
  • உச்சநீதிமன்றத்தின் முன்பும் போராட்டம் நடக்கவுள்ளது.
  • நீதிமன்ற பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது அப்பட்டமான பொய்.
  • ஆக. 9 மற்றும் 10ம் தேதிகளில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில் வக்கீல்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும்.
  • ஆக. 11 மற்றும் 12 தேதிகளில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
  • ஆக.16 முதல் 19 சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.
  • 19ம் தேதி சென்னையில் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் கிரீன்வேஸ் சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல்கள்  முற்றுகையில் ஈடுபடுவர். 
    ஆக.19ல் நடக்கும் 5 நீதிபதிகள் குழுவை, கூட்டு நடவடிக்கை குழு சந்திக்க உள்ளது. இதிலும் தீர்வு  ஏற்படாவிட்டால் டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  வக்கீல்களை திரட்டி உச்சநீதிமன்றம் முன்பு போராட்டம் நடக்கும்.
  • இந்த நிலைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல்தான் காரணம்.

            எனவே,  உச்சநீதிமன்றம் தலையிட்டு வக்கீல்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.