கன்னியாகுமரி மாவட்டத்தில் நுங்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வெளிமாவட்டங்களிலிருந்து இருந்து நுங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளிர்பான கடைகளில் குவிகிறார்கள். இதனால் பழக்கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதேநேரம், பொதுமக்களின் தேவைகள் அறிந்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான குளிர்பான கடைகள் முளைத்துள்ளன. முக்கிய சாலைகளின் இரு பக்கமும் திடீர், திடீரென முளைத்துள்ள கடைகளால், சாலையில் பயணிக்கும் மக்கள் குளிர்பானங்களையும், பழ வகைகளையும் வாங்கி செல்கின்றனர்.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில், நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. ரூ. 10க்கு 5 நுங்குகள் என்கிற வகையில் நுங்குகள் விற்பனையாகின்றன. நுங்குகளால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதாலும், அவை ஆரோக்கியமானது என்பதாலும், நுங்குகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் நுங்கு சர்பத், நுங்கு போடப்பட்ட பதநீர் ஆகியவற்றை அருந்துவதில் மக்களுக்கு கொள்ளை பிரியம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரியில் நுங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க, வெளிமாநிலங்களிலிருந்து நுங்கு இறக்குமதி செய்யப்படுகிறது.