லண்டனில் உள்ள ‘மேடம் டுசாட்’ எனப்படும் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உலக பிரசித்திப்பெற்றது.

சாதனையாளர்கள், பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் ‘மேடம் டுசாட்’டுக்கு கிளைகள் உள்ளன. டெல்லியில் உள்ள கன்னாட்பிளேஸ் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மேடம் டுசாட்’ கிளை திறக்கப்பட்டது.

மகாத்மா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மோடி, நடிகர்கள் ராஜ்கபூர், அமிதாப்பச்சன் உள்ளிட்ட 120 பேருக்கு இங்கு சிலைகள் உள்ளன.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்ட இந்த காட்சியகம் இப்போது, நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

இந்த காட்சியகம் உள்ள இடம் நெரிசல் மிகுந்ததாக உள்ளதோடு, பெண்கள் வருவதற்கு உகந்த பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், இதனை மூடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டா அல்லது குர்கானில், இந்த அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்படலாம் என தெரிகிறது.

– பா. பாரதி