டெல்லி: நாடு முழுவதும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதியதாக  22, 933 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதுடன், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  10 , 27 ,715 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமட்டும்  357 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதுவரை  டெல்லியில் மட்டும்  14 ஆயிரத்து 248பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன், மாநிலங்கள், தனியார் மருத்துவனைகள் கொரோனா தடுப்பூசிகளை மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தடுப்பூசிகளின் விலை பல மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுஉள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என  நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரம் நிறுவனத்தின் , கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து முந்தைய விலையான 150 ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் போட டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி மாநில தேவைக்காக  1.34 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,   விரைவில் கொள்முதல் செய்யப்பட்டு அவை விரைவில் மக்களுக்கு செலுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்றவர்,  தடுப்பூசி தயாரிக்கும்  இரண்டு நிறுவனங்களுமே ஒருடோஸ் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்குகின்றன. கொரோனா தடுப்பூசியின் விலை அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.

தடுப்பூசி ஒரு டோஸ் 150 ரூபாய்க்கே மாநில அரசுகளுங்ககு கொடுக்க வேண்டும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். லாபம் சம்பாதிக்க உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உள்ளது. ஆனால், லாபம் சம்பாதிக்க பொங்கி எழும் பெருந்தொற்று காலம் நேரமில்லை. தேவைப்பட்டால் மத்திய அரசே கொரோனா தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.