துபாய்: இன்று நடைபெறும் ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில், டாஸ் வென்றதும், முதலில் பேட்டிங் செய்தால் அதிக ரன் குவித்து, ‍சேஸிங்கில் மும்பைக்கு நெருக்கடி தரலாம் என்று திட்டமிட்டு முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு நினைத்தது நடக்கவில்லை. 20 ஓவர்களில் 156 ரன்களையே எடுத்தது அந்த அணி.

டெல்லி அணியின் துவக்க வீரர் ஸ்டாய்னிஸ் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். ஷிகர் தவான் 15 ரன்களில் நடையைக் கட்ட, ரஹானே எடுத்ததோ 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே.

பின்னர், கேப்டன் ஷ்ரேயாஸும், ரிஷப் பண்ட்டும் தாக்குப்பிடித்து ஆடினர். மொத்தம் 50 பந்துகளை சந்தித்த ஷ்ரேயாஸ் 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 65 ரன்களை அடித்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

ரிஷப் பண்ட் 38 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களை எடுத்தார். அதன்பிறகு, பின்வரிசையில் களமிறங்கிய ஹெட்மேயர், அக்சர் படேல் மற்றும் ரபாடா ஆகியோரால் அதிரடி காட்ட முடியவில்லை.

கடைசியாக, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களைய‍ே எடுத்தது டெல்லி அணி.

மும்பை சார்பில் பெளல்ட் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். நாதனுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. மற்றபடி, மும்பை பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்தினார்களே ஒழிய, பெரிதாக யாரும் சாதிக்கவில்லை என்றே கூறலாம். பும்ராவுக்கு இன்று ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.

இதன்மூலம், மும்பைக்கு எளிதாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பந்துவீச்சு மற்றும் பீலிடிங்கில் அதிரடி காட்டினால் மட்டுமே, டெல்லி அணியால் கோப்பை வெல்ல முடியும்.