துபாய்: ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில், டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை அணி.

மேலும், கோப்பையை முதன்முறையாக தக்கவைத்துக் கொண்டது அந்த அணி. இதன்மூலம், சென்னை அணியின் சாதனை சமன்செய்யப்பட்டுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களே எடுத்தது.

பிறகு, சற்று எளிய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா 51 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களை அடித்தார்.

டி காக் 12 பந்துகளில் 20 ரன்களையும், சூர்யகுமார் 20 பந்துகளில் 19 ரன்களையும் அடித்தனர். பின்வரிசையில் களமிறங்கிய பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா மற்றும் குருணல் பாண்ட்யா ஆகியோர் பெரிதாக அடிக்கவில்லை என்றாலும், இஷான் கிஷான் கடைசிவரை களத்தில் நின்று, 19 பந்துகளில் 1 சிக்ஸர் & 3 பவுண்டரிகளுடன் 33 ரன்களை அடித்தார்.

இறுதியில், 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது மும்பை அணி.

ஐபிஎல் கோப்பையை முதன்முறையாக வெல்லலாம் என்ற டெல்லி அணியின் கனவு பொய்த்துப்போனது. மேலும், இன்னும் ஒரு 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், போட்டியை தனக்கு சாதகமாக திருப்பும் வாய்ப்பு டெல்லி அணிக்கு இருந்திருக்கும். ஆனால், அவர்கள் அதை செய்யத் தவறி விட்டனர்.

இன்றைய முக்கியமானப் போட்டியில், டெல்லி அணியின் அஸ்வின் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. ரபாடா 3 ஓவர்களுக்கே 32 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். அக்சார் படேல் மட்டு‍மே 4 ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அதிக விக்கெட்டுகள் எடுத்து பர்பிள் தொப்பியை வெல்வார் என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அணியின் ரபாடாவோடு பயணித்த மும்பை அணியின் பும்ராவுக்கு, இன்று 1 விக்கெட்கூட கிடைக்கவில்லை.