டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக, டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 10ந்தேதி வரையும், நர்சரி பள்ளிகளுக்கு  ஜன.12 வரை  விடுமுறை நீட்டிப்பு  செய்து டெல்லி கல்வி இயக்குனரக அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. தலைநகர் டெல்லியில்  கடுமையான குளிர் சூழல் நிலவுவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். இதன் காரணமாக,  டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு,   நர்சரி முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த வாரம் விடுமுறை அறிவித்தது.  இந்த நிலையில், தற்போது மேலும்   5 நாட்களுக்கு பள்ளிகள்  மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “குளிர் கடுமையாக இருப்பதன் காரணமாக டெல்லியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான நர்சரி பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு திங்கள்கிழமை (ஜன.8) திறக்கப்பட இருந்தது. ஆனால் குளிரின் தாக்கம் குறையாத காரணத்தால் இந்த விடுமுறையானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு சார்பில் குளிர்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் 10-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. அதில், ‘தவறாக வெளியிடப்பட்டது’ என பள்ளி கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு ஜனவரி 10ந்தேதி வரையும், நர்சரி பள்ளிகளுக்கு  ஜன.12 வரை  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கவுதம்புத் நகரில் மட்டும் மாவட்ட நிர்வாகம் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜன.14 வரை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.