டில்லி

டில்லி காவல்துறையினர் மயானத்தில்  இருந்து நேரடியாக கொரோனா மற்றும் கொரோனா இல்லாத மரண கணக்கெடுப்பை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் டில்லியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.  இங்கு நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   நேற்றுவரை இங்கு 13.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 19,344 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது சுமார் 2.34 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், கொரோனா மருந்துகள் ஆகியவைக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  அத்துடன் இந்த பொருட்களைக் கள்ளச்சந்தையில் அநியாய விலைக்கு விற்பதும் அதிகரித்து வருகிறது.   இவ்வாறு செய்வோரை உடனடியாக பிடித்து வழக்கு பதிய டில்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவத்ஸா உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு வழக்குப் பதியப்பட்டவர்களின் விவரங்கள் தேசிய பணப் பட்டுவாடா கழகத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் வருவது தடை செய்யப்படுகிறது.   மேலும் இவர்களுடைய வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவை உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்களால் எவ்வித பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் மரணமடைந்தோர் எண்ணிக்கை முழுமையாக வெளியாவது இல்லை என்னும் சந்தேகம் காவல்துறையினரிடம் உள்ளது.   இதையொட்டி டில்லி காவல்துறை தலைமை 15 ,மாவட்ட துணை ஆணையர்களுக்கும் உடனடியாக மயானத்தில் இருந்து கொரோனா மரண எண்ணிக்கை மற்றும் கொரோனா அல்லாதோர் மரண எண்ணிக்கையைக் கணக்கெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பணி கடந்த மே மாதம் 1 ஆம் தேதியில் இருந்தே தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர், “இந்த உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது  ஆயினும் பல காவல்நிலைய அதிகாரிகள் தங்கள் பகுதி காவலர் மூலம் மே 1 முதலே கணக்கெடுப்பை மயானத்தில் இருந்து நேரடியாக துவக்கி உள்ளோம்.

இதில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.   இந்த விவரங்களை நாங்கள் எங்கள் பகுதி துணை ஆணையருக்கு காலை தகவலுடன் அனுப்பி விடுகிறோம்.   அவர்கள் தங்கள் தலைமைக்கு அனுப்பி வைக்கின்றனர்.  அரசு அளிக்கும் தகவல்கள் சரியானதா என்பதில் ஏங்களுக்கும் சந்தேகம் உள்ளது.   எனவே உண்மை நிலையை அறிந்து கொள்ள இந்த கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.