சென்னை: தமிழகத்தில் பல ஐஏஎஸ்,  ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படாதது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக அரசு  பதவி ஏற்றது முதல் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது. முதலில் தலைமைச்செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள், பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான வழக்குகளை  விசாரித்து வரும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம் பரிந்துரை அளிக்கும்வரை மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

வழக்கின் விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  புதிதாக ஆட்சியமைத்துள்ள தமிழக அரசு பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றம் செய்துவருகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்புப்பணிகளை அரசு மேற்கொண்டு வருவது திருப்தி அளிக்கிறது என தெரிவித்துள்ளது.