புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, டெல்லி மாநிலத்தில், இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிவரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நேரக் கட்டுப்பாடு, திருமண வீட்டார் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியைப் பொறுத்தவரை, திருமணங்கள் இரவு நேரங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள், நட்சத்திர ஓட்டல்களிலும், புறநகர்களில் உள்ள பண்ணை வீடுகளிலும், விடியவிடிய கொண்டாட்டங்களுடன் நடைபெறும்.
மேலும், இது திருமண சீஸன் என்பதால், டெல்லியை சுற்றியுள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் மண்டபங்கள் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு, ‘வெட்டிங் பிளானர்ஸ்’ என்றழைக்கப்படும், திருமண ஏற்பாடுகளை செய்து தரும் நிறுவனங்கள், பம்பரமாக சுழன்று ஏற்பாடுகளை செய்து வந்தன. இந்த நேரத்தில்தான், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்தது.
இதையடுத்து, திறந்தவெளி அரங்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 200 பேர், மூடிய அரங்கில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று டெல்லி அரசு கடந்த மாத இறுதியில் உத்தரவு பிறப்பித்தது.
திருமண வீட்டாருக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சி தந்தாலும், மனதை தேற்றிக் கொண்டு ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்நிலையில், டெல்லி மாநில அரசு, இரவு 10 மணி முதல், காலை 5 மணி வரை, அதிரடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. திருமண வீட்டாரின் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் ‘இ-பாஸ்’ வாங்கி திருமணத்தில் பங்கேற்கலாம் என்றும், மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத திருமண வீட்டார் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், தற்போது அனைத்தையும் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர், பக்கத்து மாநிலங்களான ஹரியானாவின் குர்கான், உத்திரப்பிரதேசத்தின் நொய்டா போன்ற இடங்களில், ஓட்டல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருணம வீட்டார் மட்டுமல்லாமல், திருமண ஏற்பாடுகளை செய்து வரும் நிறுவனங்களுக்கும், இந்த திடீர் அறிவிப்பு பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.