டில்லி:

டில்லியில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க நைஜீரியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி 4வது மாடியில் இருந்து குதித்து இறந்தார்.

தெற்கு டில்லி பகுதியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த சிப்ரியன் அமா ஓக்போனியா (வயது 40) என்பவர் வசித்து வந்தார். இவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தலைமை காவலர் ஒருவரை வாடிக்கையாளர் போல் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தகவல் உறுதியானதை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 25 கிலோ எடை கொண்ட கேட்டமின் என்ற போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடியாகும்.

இதையடுத்து டில்லி சத்தர்ப்பூர் என்கிளேவ் 4வது மாடியில் நின்று ஒரு ஓட்டல் ஊழியரிடம் ஓக்போனியா பேசிக் கொண்டிருந்தார். அவரை கைது செய்ய போலீசார் சுற்றிவளைத்தனர். இதையறிந்த அந்த நபர் தப்பிச் செல்ல முயன்றார். வழி இல்லாததால் அருகில் கிரில் இல்லாத ஜன்னல் வழியாக குதித்தார்.

இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இவர் 2 பெண்களுடன் இங்கு வந்து தங்கியுள்ளார். அவருடன் இருந்த ஒரு பெண்ணும் அதே ஜன்னல் வழியாக குதிக்க முயன்றார். ஆனால் போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இது குறித்து டில்லி சிறப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா கூறுகையில், ‘‘டில்லியில் பிடிபடும் நைஜீரியா போதை பொருள் ஆசாமிகள் கட்டடங்களில் இருந்து குதித்து தப்புவது வாடிக்கை. அதுபோல தான் இவரும் முயற்சித்துள்ளார். ஆனால் இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் போலீசாரின் பங்கு எதுவும் இல்லை. ’’ என்றார்.