டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகள் அமலாக்கத்துறை விசாரணைக்கு 11ந்தேதி  ஆஜராக அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை (10ந்தேதி) டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் நாளை உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர் விசாரணையை அடுத்து, டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் அமித் அரோரா கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில், ‘சவுத் குரூப்’ என்கிற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பலருக்கு மதுபானக் கொள்கை தொடர்பாக லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டார். இந்த ‘சவுத் குரூப்’ நிறுவனம், தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா, தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. மாகுண்டா ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மாகுண்டா, சரத் ரெட்டி, அபிஷேக், புச்சிபாபு ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் எம்எல்சி கவிதாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் 28 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக கவிதாவிடம் அவரது வீட்டிலேயே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில்  மார்ச் 9ந்தேதி  விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணையைத் தொடர்ந்து கவிதா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கவிதா, தன்னை தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்துமாறு கோரினார்.  ஆனால், அதை ஏற்க மறுத்த நிலையில், தனதுக்கு  அவகாசம் தேவை என கேட்டதைத் தொடர்ந்து, அவர் 11ந்தேதி  விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இதையடுத்து, மார்ச் 11-ம் தேதி நேரில் ஆஜராவதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கவிதா, அமலாக்கத்துறை விசாரணை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவிதா, நாட்டின் 9 மாநிலங்களில் பின்வாசல் வழியாக பாஜக நுழைந்திருப்பதாகவும், ஆனால் தெலங்கானாவில் அவ்வாறு நுழைய முடியாததால் பழிவாங்கும் நோக்கில் தன்னிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். தான் எவ்வித தவறும் செய்யவில்லை என்றும், எனவே விசாரணையைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.  தனது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க 18 கட்சிகள் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆதரவாக இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கவிதா கூறினார்.