டில்லி

டில்லி ஐஐடி மலிவாக கொரோனா சோதனை செய்யும் முறையை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய இரத்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  அரசு சார்பில் இலவசமாகவும் தனியார் மூலம் கட்டணத்துடனும் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன.   இதற்கு சுமார் ரூ.4500 வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  இதனால் எளிய மக்களுக்கு கடும் சிரமம் உண்டாகி உள்ளது.

எனவே டில்லி ஐஐடியை சேர்ந்த அசுதோஷ் பாண்டே, பிரவீன் திரிபாதி, அகிலேஷ் மிஸ்ரா, ஜேம்ஸ் கோம்ஸ் மற்றும் பிஸ்வஜித் குண்டு ஆகியோர் அடங்கிய குழு ஒரு புதிய சோதனையை உருவாக்கி உள்ளது  இந்த புதிய முறைப்படி சோதனை நடத்தினால் அது மலிவானதாக அமையும் என அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இந்த சோதனை முறையைப் பரிசோதித்த புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் இது மிகவும் சரியான முடிவுகளை வழங்குவதாகச் சான்று அளித்துள்ளது.   இந்த சோதனையை மற்றுமுள்ள ஐஐடிக்களிலும் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் சரியாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   கடந்த சனிக்கிழமை அன்று மத்திய சுகாதார அமைச்சரவை அளித்துள்ள சோதனை வழிமுறைகள் படி இந்த சோதனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையை தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், உள்ளிட்ட அரசு அமைப்புக்கள் பரிசோதித்து வருவதாகவும் அதன் பிறகு அனுமதி கிடைக்கும் எனவும் இந்த ஐஐடி குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.  தற்போது நாட்டில் இந்த சோதனைக்குத் தேவை அதிகமாக உள்ளதால் இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.