டில்லி
தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த சம்மனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கடந்த 20 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2 நாட்களுக்கு முன்பு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. கெஜ்ரிவால் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் முன்னிறுத்தப்பட்டார். கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி டில்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிட்டார். மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த மனுவை வரும் புதன்கிழமை தான் விசாரிக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
[youtube-feed feed=1]