டில்லி

டில்லி நீதிமன்றம் டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வாலை குற்றவாளி என அறிவித்துள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் உள்ள துர்கா விகார் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற 52 வயது மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பில் தனது தற்கொலைக்குக் காரணம் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வால் என்று குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறையினர் இந்த தற்கொலை குறிப்பின் அடிப்படையில் விசாரணை நடத்தி டில்லி தியோலி தொகுதியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வால் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

டில்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.  நேற்ற் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வாலை குற்றவாளி என அறிவித்தார். மேலும் பிரகாஷ் ஜார்வால் மீதான குற்றச்சாட்டைச் சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்றும் நீதிபதி கூறினார்.

வரும் மார்ச் 13 ஆம் தேதி இந்த வழக்கின் தண்டனை தொடர்பான வாதங்கள் நடைபெற உள்ளன.