டெல்லி: டெல்லி  மாநில ஆம்ஆத்மி அரசு மீதான மதுபான கொள்ளை ஊழல் தொடர்பாக,  அமலாக்கத்துறை அனுப்பிய  7வது சம்மனையும்  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய  அனைத்து சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்து உள்ளார்,  இந்த சம்மன்கள் சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை  ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய 7-வது சம்மனையும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால்  இன்று நிராகரித்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அமலாக்கத் துறை சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக் கூறியுள்ளது.

ஏற்கனவே 6முறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால், இதுதொடர்பாக  அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடந்ததது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் பிப்ரவரி 17ந்தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம்,  கெஜ்ரிவால், காணொலி வாயிலாக  நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அவருக்கு 7வதுமுறையாக சம்மன் அனுப்பி  இன்று  (பிப்ரவரி 26ந்தேதி) விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தியது. ஆனால், அதையும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி கூறுகையில், “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 16ம் தேதி நடக்க இருக்கிறது. எனவே அமலாக்கத் துறை தினமும் சம்மன் அனுப்புவதை நிறுத்திவிட்டு பொறுமையாக நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

லைநகர் டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வருக்கு  அமலாக்கத் துறை சார்பில் 7  முறை சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.