சென்னை: கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வணிகவரி, பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ், ஈழத்தமிழர்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்றைய கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று தமிழ்கஅரசுக கோரிக்கை வைத்தார்.
பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக இருக்கிறது; தேவைப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், அமைப்புகள் இணைந்து அடையாள போராட்டத்தை நடத்தி நம் ஒற்றுமையை காட்டலாம் என்றும், மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டும் என்றார்.
மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு பாஜக எதிர்க்கும்; தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி உறுதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பதிலுரை ஆற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கட்சி வித்தியாசம் இல்லாமல் இப்போது இருப்பது போல் எப்போதும் இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.