இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி, ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. இதனால், பெரும்பான்மை இழந்துள்ள இம்ரான்கான் ராஜினாமா செய்ய மாட்டேன், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன் என்றும், தன்னை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாகவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இம்ரான்கான் அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வரும் 3ந்தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அதன்மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

இதற்கிடையில்,  இம்ரான்கான் அரசுக்கு  ஆதரவு அளித்து  வந்த  கூட்டணி கட்சிகளான முத்தஹிதா குவாமி இயக்கம் (MQM) மற்றும் பலுசிஸ்தான் அவாமி கட்சி (BAP) ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகளுடன் கை கோர்த்ததால் பிரச்சனைகள் அதிகரித்தன. எம்.கி.எம் கட்சி, தனது ஆதரவை விளக்கி கொள்வதாக அறிவித்துவிட்டு, எதிர்க்கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால்,  எதிர்க்கட்சிகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை  177 ஆக உயர்ந்துள்ளது. ஆளும் கட்சியான இம்ரான்கான் அரசின் பலம் 164 குறைந்துள்ளது. இதனால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த பரபரப்பான சூழலில் நாட்டுக்களுக்கு பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது,  பாகிஸ்தான் பிரதமர்  பதவியை தான் (இம்ரான் கான்)  ராஜினாமா செய்யப்போவதில்லை; ஏப்ரல் 3ஆம் தேதி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். அத்துடன்,  பாகிஸ்தான் நாடு  ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாததால், தன்னை நீக்க வெளிநாடு சதி நடைபெறுவதாகவும், அது தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாகவும், இந்த மிரட்டல் கடிதத்தின் பின்னால் உள்ள நாடு என்று அவர் அமெரிக்கா என்றும் கூறினார்.

மேலும்,  நான் எப்போதும் கடைசி பந்து வரை போராடுவேன். தங்கள் மனசாட்சியை விற்றவர்களை அன்று முழு தேசமும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களைத் தாக்கினார். தனக்கு துரோகம் செய்தவர்களையிம், கிளர்ச்சி செய்யும் உறுப்பினர்களை “துரோகிகள்” என்று வர்ணித்த கான், அவர்கள் மீண்டும் வந்து தனது அரசாங்கத்தை கவிழ்க்கும் எதிர்க்கட்சியின் முயற்சியை முறியடிக்குமாறு கெஞ்சுவதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும்  துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.
அவர்களின் சதியை ஒருபோதும் வெற்றிபெற விடமாட்டேன், “சதிக்கு எதிராக நான் போராடுவேன் என்றும்  சட்டசபையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்வதாகவும் கூறினார்.