இந்திய ராணுவம் முப்படை தலைமை தளபதியை இழந்தது குறித்து முப்படை விசாரணை நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அறிக்கை

Must read

இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் நேற்று மதியம் 12:15 மணிக்கு குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் 2021 ம் ஆண்டு டிசம்பர் 8 ம் தேதி நண்பகல் கோர விபத்தில் சிக்கியதில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த துக்கத்துடனும் தெரிவிக்கிறேன்.

ஜெனரல் பிபின் ராவத், வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி மாணவ அதிகாரிகளைச் சந்தித்து உரையாட சென்றார். நேற்று காலை 11:48 மணிக்கு சூலூர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படையின் Mi-17V5 ஹெலிகாப்டர் மதியம் 12:15 மணிக்கு வெலிங்டனில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மதியம் 12:08 மணியளவில் சூலூர் விமான தளத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டகம் ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, குன்னூர் அருகே வனப்பகுதியில் தீப்பற்றியதைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இடிபாடுகளுக்கு இடையே ராணுவ ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். அப்பகுதியில் உள்ள உள்ளூர் நிர்வாகத்தின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் இந்த கோர விபத்தில் பலியாகியுள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இறந்தவர்களில் ஜெனரல் பிபின் ராவத்தின் மனைவி திருமதி மதுலிகா ராவத், அவரது பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிடர், பணியாளர் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர் விமானிகள் உட்பட ஒன்பது ஆயுதப் படை வீரர்கள் உள்ளனர்.

அவர்களின் பெயர்கள் விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான், ஸ்க்வாட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார், லான்ஸ் நாயக் பி சாய் தேஜா.

குரூப் கேப்டன் வருண் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சையில் உள்ளார் மேலும் அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், துயருற்ற குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து வந்த காங்கிரஸ் கட்சியினர் பிபின் ராவத் மறைவை ஒட்டி இன்று அவை நடவடிக்கைகளில் பங்கேற்று அவருக்கு புகழஞ்சலி செலுத்திவருகின்றனர்.

More articles

Latest article