டில்லி

நாளை லடாக் செல்ல இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இந்தியாவில் லடாக் எல்லைப் பகுதியில்  சீனப்படைகள் முகாம் இட்டதைத் தொடர்ந்து இந்திய வீரர்களும் குவிக்கப்பட்டனர்.  பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சீனப்படைகள் திரும்பச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது.   அப்போது சீனப்படைகள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர்.  சீனாவின் தரப்பில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளி வரவில்லை.

இதைத் தொடர்ந்து எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது.   இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு புறம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.  ஆனால் அதே வேலையில் சீனா தனது படைகளை மேலும் மேலும் குவிப்பதோடு தடவாளங்களையும் எல்லைப்பகுதிக்கு நகர்த்தி உள்ளது. இந்தியாவும் மேலும் மேலும் படைகளைக் குவித்து வருகிறது.

நாளை இந்தப் பகுதியைப் பார்வையிட லடாக் செல்வதாக மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.  இந்த பயணத்தின் போது அவர் எல்லையில் இந்தியப் படைகளின் தயார் நிலையை ஆய்வு செய்வார் எனவும் ராணுவ மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டங்களை நடத்த உள்ளார் எனவும் கூறப்பட்டது.

தற்போது ராஜ்நாத் சிங் தனது லடாக் பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.   அத்துடன் அவரது பயணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.  இது மக்களிடையே பரபரப்பை மட்டுமின்றி பற்பல ஊகங்களும் எழுந்துள்ளன.

அரசு தரப்பில் இது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை.  இரு தரப்பிலும் ராணுவப்படைகள் திரும்பப் பெறச் சீனா உறுதி அளிக்கும் வரை இந்தியா காத்திருக்க விரும்புவதாகக் கூறப்படுகின்றன.   வேறு சில தகவல்கள் திங்கள் அன்று ராஜ்நாத் சிங் லடாக் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.