டெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மதுரை திருபரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 29-ம் தேதி உத்தரவிட்டது.
இது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து அவதூறாகப் பேசிய திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், திட்டமிட்டு அவதூறு கருத்துகளைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைபர் க்ரைம் போலீஸாரிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.மணி குறிப்பிட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களை இயக்கும் நபர்களை கண்டறியவும், அவதூறு கருத்துகளை நீக்கவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புத்தகங்கள் பறிமுதல்: நீதிபதியை அவதூறாக சித்திரிக்கும் கார்ட்டூனை அட்டைப் படமாக கொண்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, குருசாமி தலைமையிலான சமூக நல்லிணக்கத்துக்கான மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பொது அமைதியை நிலைநாட்டவும், சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்து நீதித் துறையின் சுதந்திரம், கண்ணியத்தைப் பாதுகாக்கவும் நீதிமன்றங்களின் உத்தரவுப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]