சென்னை:
ஜெயலலிதா ◌தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த, ஆறு அவதுாறு வழக்குகளின் விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜகவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும், மீண்டும் அவரை ஆட்சியில் அமர்த்தியது குறித்தும், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும், ‘ஜெயலலிதா மீது இன்னொருசொத்து குவிப்பு வழக்கு தயாராக உள்ளது’ என்றும் தெரிவித்திருந்தார்.
இது, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, ஜெயலலிதா சார்பில், மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஆறு அவதுாறு வழக்குகளை தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான சுப்பிரமணியன் சாமி, தனக்கு எதிரான அவதுாறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, வாதிட்டார். இதையடுத்து, அவர் மீதான, ஆறு அவதுாறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.