சென்னை,

கோவையில் உயிரிழந்த பொறியாளர் ரகுவின் மரணத்திற்கு சாலையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையில் அதிமுக சார்பில் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வுக்கு பேனர் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு வருகிறது.  கோவை வ.உ.சி பூங்கா முதல் விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட்அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டன.

இதில் சிங்காநல்லூர் அருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மீது மோதி இளைஞர் ரகு என்பவர்  உயிரிழந்தார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், சாலையை மறைத்து பேனர்களை வைக்க அதிகாரிகள் அனுமதிப்பது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வரும் காலங்களில் நடைப்பாதை மற்றும் சாலைக்கு நடுவே பேனர்கள் வைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.